dimanche 2 mai 2010

இணக்க அரசியல் தான் இப்போதுள்ள ஒரே வழி


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெவ்வேறு உரிமைக் கோரிக்கைகளுக்கு இடமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்திருக்கின்றது. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்களின் தெளிவான ஆணை கிடைத்திருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்வதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றனர். அரச தரப்பினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. இது புலிகளுக்குப் பெருமளவு ஆதரவு இருப்பதைக் காட்டுகின்றது எனக் கூறுவாரும் உளர். இவர்களினது கூற்றின்படி, புலி ஆதரவாளர்களே வாக்களிக்காதவர்கள்.

இது போன்ற அடி முட்டாள் அபிப்பிராயம் வேறெதுவும் இருக்க முடியாது. கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் புலிகளின் வேட்பாளர்களாகவே போட்டியிட்டார்கள்.

இவர்களை மக்கள் அடியோடி நிராகரித்து விட்டார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ‘புலி ஆதரவு’ இல்லை என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதலானோர் வாக்களிக்கவில்லை என்பதை ஒரு பிரச்சினையாக முன்வைப்பதில் அர்த்தமில்லை. அங்கு வாக்காளர் பட்டியல் முறைப்படியாக மீளாய்வு செய்யப்படவில்லை. பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ளோரில் பலர் இப்போது அங்கே இல்லை. அந்தப் பட்டியலை வைத்து வாக்களிப்பு விகிதாசாரத்தைக் கணக்கிடுவது சரியான கணக்கீடாகாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுக்கு வருவோம். ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்காக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்பதே இத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் செய்தி.

சென்ற தடவையிலும் பார்க்க மிகக் குறைவான வாக்குகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்றது. புலிகளுடன் சேர்ந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் இவர்கள் செயற்பட்டதற்கு மக்கள் வழங்கிய தண்டனை என்று இதைக் கூறலாம்.

தேர்தலின் போது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தால் இவர்களும் கஜேந்திரன், பத்மினி கூட்டத்தைப் போல மக்களால் நிராகரிக்கப் பட்டிருப்பார்கள்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டை இவர்கள் எடுத்ததாலேயே ஓரளவு வாக்குகள் கிடைத்தன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகளும் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வாக்குகளே.

சென்ற தடவையிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் ககடைத்திருக்கின்றன. முன்னணியின் வேட்பாளர்கள் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற கோஷத்தையே பிரதானமாக முன்வைத்தார்கள். எனவே, வடக்கு கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த வாக்குகளும் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வாக்குகளே.

மக்களாணை

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையைச் சரியாகப் புரிந்து கொள்வதானால் அது ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை அடைவதற்கான ஆணையாகும். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் மக்களாணை பற்றிப் பேசுகின்றது. மக்கள் வழங்கிய ஆணையைச் சரியாகப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவது தான் இப்போது அவர்கள் செய்ய வேண்டியது.

“தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்களே” என்று வழமை போலப் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட எல்லோரும் மக்களின் பிரதிநிதிகள் தான். எல்லோரும் ஒன்று சேர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குச் செயற்பட வேண்டும்.

எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கடந்த காலங்களின் கசப்பான அனுபவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையின் அரசு வழிச் சமூக அமைப்பு இணக்க அரசியலையே வலியுறுத்துகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தங்கள் வழமையான பாணியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும். முரண்பாடுகளை வளர்க்காமல் சாத்தியமான தீர்வைப் பெறும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நிச்சயம் பலனளிக்கும்.

துரோகிப் பட்டம்:

பதவியிலுள்ள அரசாங்கத்துடன் யாராவது ஒத்துழைக்க முன்வந்தால் அல்லது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவது தமிழ் அரசியலில் ஒரு கலாசாரமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் ‘ஒறிஜினல்’ கட்சிகள் ஆரம்பித்து வைத்த கலாசாரம் இது.

ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது அரசாங்கத்தில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் இணைந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற போது தமிழரசுக் கட்சி அவரைத் துரோகி என்றது. பின்னர் தமிழரசுக் கட்சி பிரதமர் பண்டாரநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டியது.

இரண்டு கட்சிகளும் 1965ம்ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாகியதும் ‘துரோகி’யை மறந்து விட்டன. அதன்பின், அரசாங்கத்துடன் ஒத்துழைப்பவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் பழைய பல்லவி தொடர்ந்தது.

இந்தத் ‘துரோகி’க் கலாசாரத்தினால் தமிழ்க் கட்சிகள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டனவேயொழிய மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

உரிமைகளைப் பெறுவதற்தற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது ஒருபோதும் துரோகமாகாது. பதவியிலுள்ள அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது துரோகச் செயல் என்ற மாயையிலிருந்து தமிழ்த் தலைவர்கள் விடுபட வேண்டும். இணக்க அரசியலின் அடிப்படையில் அரசாங்கத்துடன் தீர்வு தொடர்பாகப் பேச வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க முக்கியமான பொறுப்பு வேறெதுவும் இல்லை.

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினை இனப்பிரச்சினை என்பதைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் பிரதான பொறுப்பு என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்ப்பு அரசியலின் எல்லா வழிகளையும் கூட்டமைப்பு பரீட்சித்துப் பார்த்தாகி விட்டது. எல்லா வழிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இணக்க அரசியல் தான் இப்போதுள்ள ஒரே வழி. அதாவது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

ஐ. தே. கவின் புனரமைப்பு

ஐக்கிய தேசிய கட்சியைப் புனரமைக்கப் போவதாகச் சொல்கின்றார்கள். கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூடுதலான பொறுப்புகள் வழங்கப்படவிருப்பதாகவும் கயந்த கருணாதிலக கூறுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சிச் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலர் தாங்கள் சுதந்திரமாகச் செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். வேறு சிலர் கட்சியலிருந்து வெளி யேறி அரசாங்கத்துடன் இணைவது பற்றி ஆலோசிக்கின்றார்கள்.

இந்த நிலையில் எம்.பிக்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுத்தாவது அவர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கலாம் என்று கட்சித் தலைமை கருதுகின்றது போலும்.

ஒவ்வொரு தேர்தல் தோல்வியின் பின்னரும் ஐக்கிய தேசிய கட்சியைப் புனரமைப்பது பற்றிப் பேச்சு அடிபடுவதும் பின்னர் எதுவும் நடவாமற் போவதும் வழமையாகிவிட்டது.

என்னதான் புனரமைப்புச் செய்தாலும் இரண்டு விடயங்களில் மாற்றம் இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியை இறங்குபடிப் பயணத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது. ஒன்று தலைமை மாற்றம். மற்றது கொள்கையில் மாற்றம்.

தலைவரை மாற்ற வேண்டும் என்பதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு. ஆனால் கட்சியின் யாப்பு மாற்றப்படாதிருக்கும் வரை எவ்வளவுதான் முயன்றாலும் தலைவரை அப்பதவியிலிருந்து நீக்க முடியாது.

பதவியிலிருக்கும் தலைவர் இறக்கும் வரை அல்லது தானாக விலகும் வரை அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியாதபடி ரணில் யாப்பில் திருத்தம் செய்திருக்கின்றார். யாப்பைத் திருத்தும் வரை ரணில் தான் நித்திய தலைவர்.

ஐக்கிய தேசிய கட்சி இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக இதுவரை தெளிவான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

அதேநேரம் இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகச் செயற்படும் வரலாற்றையும் கொண்டிருக்கின்றது. இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களில் ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இனப்பிரச்சினையின் தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.

பொதுசன ஐக்கிய முன்னணினின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது ஒரு சந்தர்ப்பம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நியமித்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்காதது மற்றைய சந்தர்ப்பம்.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் நண்பன் போலப் பாசாங்கு செய்து கொண்டே இனப் பிரச்சினையின் தீர்வு முயற்சிக்குக் குழிபறித்தது. இப்படியான செயற்பாடுகளினால் சிறுபான்மையினர் ஐக்கிய தேசிய கட்சித் தலைமையில் நம்பிக்கை இழக்கின்றனர்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதைத் துல்லியமாகக் காட்டுகின்றன. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியீட்டியிருக்கிறார்களேயொழிய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் வெற்றியீட்டவில்லை.

எந்தவிடயத்திலும் தெட்டத்தெளிவான கொள்கையை முன்வைக்க வேண்டும். நழுவல் போக்கைப் பின்பற்றினால் மக்களிடமிருந்து அந்நியமாவதைத் தவிர்க்க முடியாது.

Aucun commentaire: