யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட் டக் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு களுக்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார்.யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் நாற்பதாயிரம் குறைவாகும். மக்களின் அக்கறையின்மை, அதிருப்தி, உட்கட்சிக் குழப்பங்கள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
வேட்பாளர் தெரிவு முறையாக இடம்பெறவில்லை. மாவட்ட முறைத் தேர்தல் இது என்று கூறப்பட்டாலும் வேட்பாளர் தெரிவு அதைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
நான் நல்லூர்த் தொகுதியின் நிரந்தரக் குடியிருப்பாளன். முன்னரும் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றேன். இத் தேர்தலில் என்னை விட நல்லூர்த் தொகுதியிலிருந்தே மேலும் ஐந்து வேட்பாளர்களைக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிறுத்தியிருந்தது. இது, என்னை மிகவும் பாதித்தது. இவர்கள் வேறு தொகுதிகளைக் கவனிப்பார்கள் என்று கூறப்பட்டபோதும், நல்லூர்த் தொகுதி வாக்குகளையே இவர்கள் எல்லோரும் பிரித்தனர்.
வேட்பாளர் தெரிவின்போது யாழ்ப்பாணத் தொகுதிக்கு ஒருவரும், கோப்பாய்த் தொகுதிக்கு இருவரும், நல்லூர்த் தொகுதிக்கு அறுவருமாக மூன்று அடுத்தடுத்த தொகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பது பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஏனைய எட்டுத் தொகுதியிலிருந்தும் மூவர் நியமிக்கப்பட்டனர்.
வேட்பாளர் தெரிவின்போது ஏனைய பகுதிகளுக்கு அதிக கவனமும், இடமும் அளிக்கப்பட்டிருந்தால் அந்தந்தப் பகுதிகளில் இருந்து அதிக வாக்குகளை இன்னும் திரட்டியிருக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கும்.
தேர்தலில் வேட்பாளர்கள் தோற்கவில்லை. கட்சியே தோற்றது.
நேரடியாக ஐந்துபேரை இந்தப் பட்டியலில் தமிழரசுக் கட்சி நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தை மட்டுமே தமிழரசுக் கட்சியால் பெற முடிந்தது.
கடந்த தடவை பெற்றிருந்த எட்டு இடங்களுடன் களமிறங்கிய கூட்டமைப்பினால் இம்முறை ஐந்து இடங்களையே தக்கவைக்க முடிந்தது.
கடந்த தடவை போல கூட்டமைப்பு இம்முறை எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்தால் எட்டு அங்கத்தவர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருப்பர். கூட்டமைப்பு ஐந்து இடங்களைப் பெற்றபடியால் ஐவர் தெரிவாகினர். எனவே, தோல்வி கூட்டமைப்புக்கே. தவிர, தெரிவாகாத வேட்பாளர்களுக்கு அல்ல.
தேர்தல் பிரசாரங்களில் உட்கட்சிப் போட்டி மக்களை வெறுப்படையவும் வாக்களிக்காமல் ஒதுங்கவும் வழி வகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.எனக்கு வாக்களிக்க வேண்டாம் என எமது இரு வேட்பாளர்களே கூறி வந்தமை எனக்குத் தெரியும். சில வேட்பாளர்கள் தமது இலக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர். வேறு சிலரோ தமக்கு மட்டும் வாக்களித்து ஏனைய எவருக்கும் வாக்களிக்கக்கூடாது எனவும் பிரசாரம் செய்தார்கள்.
என்னைத் தமிழ்க் காங்கிரஸ்காரர் என சிலர் விமர்சித்தனர். "தமிழரசுக் கட்சிக்காரன் தேர்தல் ரிக்கெட்டுக்காகத் தமிழ்க் காங்கிரஸுக்கு வந்தவன்' என்று கூறித் திரிந்தனர். கட்சி ரீதியாகப் பார்த்தால் இதில் சற்று நியாயம் இருக்கலாம்.
ஆனால் 58 வருடங்கள் தமிழரசுக் கட்சி சார்பானவனாக இருந்த என்னை "இவன் காங்கிரஸ்காரன். தேர்தல் முடிந்ததும் காங்கிரஸுக்கே போய்விடுவான்' எனத் தமிழரசுக் கட்சியினரில் ஒரு குழுவினரே பிரசாரம் செய்தமை கவலைக்குரியது.
"விடுதலைப்புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகள்' எனக் கூறி தமது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டோர் இப்போது புலி எதிர்ப்புக் கருத்தைப் பிரதிபலித்தமையும் கவலைக்குரியது.
ஆனால் நான், 1982 87 இல் எங்கே நின்றேனோ இப்போதும் அக்கருத்திலேயே நிற்கிறேன்.
இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்பே அரசியல் தீர்வு எனப் பேசி அரசியல் தீர்வு நடவடிக்கைகளை இழுத்தடிக்கக் கூடாது. இயல்பு நிலைக்குத் திரும்பலும், அரசியல் தீர்வு நடவடிக்கைகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்படாமல் இயல்பு நிலையை நாம் துரிதமாக உருவாக்கமுடியாது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
எனக்கு மட்டும் அப்படி எவ்வாறு விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கனகச்சிதமாக மூன்று தொடர் பூச்சியங்களைக் கொண்டதாக ஏழாயிரம் என வரும் என்பது கவனிக்கத்தக்கது. நான் ஒரு கணக்காளன். நிர்வாகி. இதன் பின்புலம் குறித்து எனக்குத் தெரியும். மக்களுக்கும் தெரியவரும்.
பேராசிரியர் சிற்றம்பலம்
இதேசமயம், இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிற்றம்பலமும், வேட்பாளர் தெரிவு தொடர்பாக சிவஞானம் தெரிவித்த கருத்தை அங்கு வழிமொழிந்து உரையாற்றினார்.
"வேட்பாளர் தெரிவுமுறை திருப்தி தரவில்லை. அது நியாயமாக இடம்பெறவில்லை. கொழும்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு திணித்தார்கள். அதுவும் பின்னடைவுக்குப் பிரதான காரணம்.'' என்றார் சிற்றம்பலம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire