இன்று சித்திரா பௌர்ணமி தினம்
4/28/2010 9:31:18 AM
மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரை மாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இது வசந்தகாலம்.
"காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கின்றேன்..." என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.
இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எத்தனை புண்ணிய நாட்கள்?
வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை 'திதி' என்கின்றோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு 'திதி' கொடுப்பதும், (அன்று சூரிய, சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய, சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)
அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.
சிவசக்தி ஐக்கியம்
சூரியனைப் பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்.
சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.
மனித மனதில் திதிகளின் தாக்கம்
அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன.
மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள் உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.
இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால், சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது.
நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற, இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது. ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை.
ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம். 'மனம் வசப்பட உன்னை உணர்வாய்' என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால், வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.
சித்திரா பௌர்ணமியை ஒட்டி அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.
mercredi 28 avril 2010
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire