jeudi 29 avril 2010

வடக்கில் கடத்தல் ,கப்பம், கொலை, வல்லுறவுகளை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

வடக்கே தொடர்ந்தும் இடம் பெற்றுவரும் ஆட்கடத்தல்,கப்பம் கோரல், பாலியல் வல்லுறவு, கொலைகள் போன்ற குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்தப் படவேண்டும்

யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.சகல இன மக்களும் அச்சமின்றி அமைதியாக வாழலாமென அரசு அறிவித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான பணத்தைக் கப்பமாக மிரட்டி பெறுவதும், அதனைத்தராதவர்களை கொலை செய்வதும் வடக்கில் தொடர்கின்றது.

இச்சம்பவங்களால் பெற்றோர், இளம் சமூகத்தினர், மாணவர்கள் பெரும் அச்சத்துடன் வாழுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லையென அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமை இச்சம்பவங்கள் தொடர்வதை மூடி மறைக்கவும் அவை தொடர்வதற்கும் வழிவகுப்பதாகும்.

சாவகச்சேரியில் மார்ச் 13 இல் மாணவன் குருச்செல்வம் கபிலநாத் கப்பம் கேட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், வவுனியாவில் கிருஷ்ண கோபாலன் என்ற இளைஞன் மார்ச் 25ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், வன்னியிலிருந்து மீளக்குடியேற வந்த இளம் பெண் ஏப்ரல் 18ஆம் திகதி மானிப்பாயில் கடத்தப்பட்டு பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம், வவுனியாவில் ஏப்ரல் 25இல் அரச வைத்தியசாலை அருகில் குடும்பஸ்தர் கடத்தப்பட்ட சம்பவம்.

யாழ்ப்பாணம் நவாலியிலும் மானிப்பாயிலும் மகேந்திரன், மகேஸ்வரன் ஆகிய இருவர் ஏப்ரல் 20ஆம் திகதி பெருந்தொகை பணத்துக்காக கடத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இச்சம்பவங்கள் தொடர்பான காரணங்கள் கைது செய்யப்பட்ட நபர்கள்,அரசியல் சக்தி எது என்ற விபரங்களை பொலிஸ் தலைமையகம் வெளியிடவேண்டுமென வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறான தொடர் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென வடபகுதிக்கு பொறுப்பான பாதுகாப்பு தரப்பினரிடமும் அரசையும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியும் உரிமையின் அடிப்படையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இரத்தத்தை உறைய வைக்கும் பீதியும் அச்சமும் நிறைந்த இச் செயல்கள் தொடர்வதற்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஈனச் செயல்களின் பின்னால் இருக்கும் சக்திகள் இனங்காணப்படவேண்டும்.

சட்டம், நீதி இருப்பதானால் இக்கொடூர சம்பவங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசும் பாதுகாப்புத்துறையும் இவ்வாறான சம்பவங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்பாவி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் , சுதந்திர நடமாட்டம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire: