யாழ். குடாவில் மீண்டும் தலைதூக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல்
உளவுத்துறையென வருவோரைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம் - ஈ.பி.டி.பி
உளவுத்துறை என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவர்களை கண்டு பொதுமக்கள் ஏமாந்து விடக் கூடாது. உண்மையில் வருபவர் உளவுத்துறையைச் சேர்ந்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் அக்கம் பக்கத்தினரின் உதவியை பெற வேண்டும் அல்லது தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குடாநாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.
கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
யாழ். குடாநாட்டில் கடத்தல், கொலை, கற்பழிப்பு என கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்துள்ளமை தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். குடாநாட்டில் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களை வளரவிடாமல் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோரிக்கையை ஏற்று மக்கள் நடந்து கொண்டதன் மூலம் அண்மையில் நவாலி பகுதியில் நடந்திருந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். குடாநாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இனிமேல் இவ்வாறான சமூக விரோத சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படியும் அதனையடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் இணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர், அடுத்த வீட்டில் இவ்வாறானதொரு சம்பவம் நடக்கும் போது பக்கத்து வீட்டார் தங்களுக்கென்ன என்ற நிலைப்பாட்டில் இருந்து விடாமல் உடனடியாக அவ்வீட்டாருக்கு உதவ முன்வர வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் செயற்பாடுகளின் போது புலனாய்வுத் துறையினருக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலனாய்வுத் துறையினரின் பெயரைப் பயன்படுத்தி சில தீய சக்திகளும் மக்கள் முன்வரும் நிலை தோன்றியுள்ளதாகத் தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.
அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது தனது தொலைபேசி இலக்கங்களான 0212229824, 0112503467, 0777781891 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு உடன் அறிவித்தால் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சாவகச்சேரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
சிறுவன் கப்பம் கோருவதற்காக கடத்தப்படவில்லை. கடத்தப்பட்டு சில மணி நேரத்துள்ளேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளான். இது அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ள விடயம். சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாதுள்ளது என்றும் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire