mercredi 28 avril 2010

மக்களின் எதிர்பார்ப்பு...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்று வருகின்றனர். பிரதமர் டி. எம். ஜயரத்னவும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய அமைச்சர்கள் யாவரும் தமது கடமையேற்பு நிகழ்வின் போது தெரிவித்திருந்த விடய மொன்று இங்கு பிரதானமாக கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

தமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களைச் சீரமைப்பதன் மூலம் அதியுச்ச சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கப் போவதாகவும் ஊழல், முறைகேடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லையெனவும் புதிய அமைச்சர்கள் தமது பதவியேற்பு உரையின் போது திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மக்கள் கொண்டு ள்ள எதிர்பார்ப்புகளுக்கு நம்பிக்கை தருவதாக அமைச்சர்களின் உறுதிமொழிகள் அமைந்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது.

புதிய அமைச்சரவையை மக்கள் புதிய கண்ணோட்டத்துடன் நோக்குகின்றனரென்பது வெளிப்படையான விடயமாகும். முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைத் தெரிவித்து வந்தன. அமைச்சர்களின் அதிக எண்ணிக்கை தொடர்பாக மக்கள் மத்தியிலும் திருப்தி நிலவவில்லையென்பதை இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

இக்குறையைப் போக்க வேண்டுமென்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாகவே உறுதிப்பாடு கொண்டிருந்தாரென்பது வெளிப்படையான உண்மை. அமைச் சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுமென்ற உறுதியான அறிவிப்பை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசாரங்களின் போது நாட்டு மக்களுக்கு முன்வைத்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது உறுதிமொழியை அமைச்சர்கள் நியமனத்தில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு இடமளிக்காமல், நிதானமான பரிசீலனையின் பின்னர் அமைச் சர்களின் நியமனத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமை மக்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானது அரசாங்கத்தின் செலவினத்தை பெருமளவு கட்டுப்படுத்த வழியேற்படுத்துமென்பதில் ஐயமில்லை. அதுமாத்திரமன்றி எதிரணியினரால் தெரிவிக்கப்பட்டு வந்த விமர்சனத்துக்கும் ஜனாதிபதி தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இத்தகைய நிலையில் இன்றைய புதிய அமைச்சர்கள் மூலம் வினைத்திறன் கூடிய உச்ச சேவையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இந்த அபிலாஷையை நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு புதிய அமைச்சர்களுக்கு உண்டு.

இலங்கையின் கடந்தகால வரலாற்றை எடுத்து நோக்குவோமானால் சில அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் சிலவற்றில் சீரற்ற கட்டமைப்புத் தன்மையும் பொருத்தமற்ற நிர்வாக முறைமையும் நிலவி வந்துள்ளன. இதன் காரணமாக இந்நிறுவனங்கள் இலாபமீட்டாத நிலையிலேயே இயங்கி வந்தன. பெரும் நஷ்டத்தின் மத்தியிலேயே இந்நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை வழங்கி வந்தன.

இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம் உட்பட சில நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மேற்படி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வைத்த மைக்கு அன்றைய அமைச்சர்களையோ அல்லது அமைச்சுக்களின் கீழுள்ள அதிகாரிகளையோ முழுமையாக குற்றம் கூறி விடவும் முடியாது.

நிர்வாகக் கட்டமைப்பின் எங்கோவொரு இடத்தில் நிலவிய முறைகேடுகளுக்கு அப்பால் கடந்த கால யுத்தமும் முக்கியமானதொரு காரணம் எனலாம். எந்தவொரு நிறுவனமும் சீராக இயங்குவதற்கு அன்றைய காலத்தில் யுத்தம் இடமளிக்க வில்லை. நிர்வாக இயந்திரம் சீராக இயங்குவதற்கு யுத்தம் இடம ளிக்காதது ஒருபுறமிருக்க நிறுவனங்களுக்குரிய உடைமைகளும் கடந்த காலத்தில் பெருமளவில் நாசமடைந்து போயுள்ளன. யுத்தம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை விபரித்துக் கூறுவது இலகுவான காரியமல்ல.

யுத்த அவலத்திலிருந்து எமது நாடு மீட்சி பெற்றுள்ள இந்நிலையில் புதிய அரசாங்கமும் புதிய அமைச்சரவையும் தோற்றம் பெற்று ள்ளன. அமைச்சுப் பணிகளை திறம்பட முன்னெடுப்பதில் இனி மேல் எந்தவொரு தடையும் கிடையாது.

எனவேதான் மக்கள் கூடுதலான எதிர்பார்ப்பை இப்போது கொண்டு ள்ளனர். யுத்தத்தினால் சீரழிந்து போன நாட்டை மீளக்கட்டி யெழுப்புவதற்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் காத்திரமான திட்டங்களை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அத்திட்டங்களை செவ்வனே செயலுருப்படுத்தும் பொறுப்பு அமைச்சர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. தாங்கள் மக்களின் சேவகர்களென்ற திடசங்கற் பத்தை அமைச்சர்கள் எவ்வேளையிலும் மனதில் கொண்டு செயற்படுதல் வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு இதுவேயாகும்.

Aucun commentaire: