mardi 20 avril 2010

வடக்குப் பிரதிநிதிகளின் பொறுப்பு

வடக்குப் பிரதிநிதிகளின் பொறுப்பு


வடக்கிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணம் அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் மிகவும் பின்தங்கியதாக இருக்கின்றது. நீண்ட காலமாகப் புலிகளின் செல்வாக்கு இப்பிரதேசத்தில் மேலோங்கியிருந்ததே இதற்குக் காரணம். புலிகள் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை. அத்துடன் நிற்காமல் பாலங்கள், புகையிரதப் பாதைகள் போன்றவற்றைச் சேதப்படுத்தினார்கள்.

கிழக்கு மாகாணமும் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகிய போதிலும் புலிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின் நிலைமை மாறியது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை அங்கே இப்போது செயற்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரே கிழக்கில் பல அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றன. இப்போது மாகாண சபையின் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அங்கு மூன்று பிரதான தொழிற்சாலைகள் இருந்தன. காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் என்பன அவ்வப் பிரதேசங்களில் கணிசமான வேலைவாய்ப்புக்களை வழங்கும் நிறுவனங்களாக இருந்தன. ஆயிரக் கணக்கான குடும்பங்கள் இம் மூன்று தொழிற்சாலைகளிலும் சார்ந்து வாழ்ந்தன.

இன்று அத் தொழிற்சாலைகள் செயற்படாத காரணத்தினால் இக் குடும்பங்கள் வருமானமிழந்து தவிக்கின்றன. தொழிற்சாலைகள் இயங்காதிருப்பது ஒருபுறமிருக்க, வடக்கின் உட்கட்டுமான வசதிகளும் புலிகளால் வெகுவாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிலையையிட்டு வருத்தப்படாதிருக்க முடியாது. மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் இவ்விடயங்களில் அவர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது அரசாங்க மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமேயொழிய வடக்கு மக்களின் உண்மையான பிரதிநிதிகளென உரிமைகோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட தீர்மானமல்ல.

செயலற்றிருக்கும் தொழிற்சாலைகளைப் புனரமைத்துச் செயற்பட வைப்பதும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதும் ஏனைய அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள். மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இவ்விடயங்களில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமைகோரிய தலைவர்கள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மாத்திரமே தங்கள் பணி என்று தங்களுக்குள்ளேயே ஒரு வரையறையை வகுத்துக் கொண்டு அபிவிருத்தியில் அக்கறை கொள்ளாதிருந்தனர். இதன் விளைவாக வடக்கில் அபிவிருத்தி இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வும் இல்லை. மொத்தத்தில் மக்கள் சார்பான எந்தப் பொறுப்பையும் இப் பிரதிநிதிகள் நிறைவேற்றவில்லை.

இனப் பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சியும் பிரதேச அபிவிருத்திக்கான முயற்சியும் ஒன்றுக்காக மற்றொன்று பின்தள்ளப்பட முடியாதவை என்பதை உணர்ந்து, வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடுதலான கவனம் செலுத்துவார்களென நம்புகின்றோம்.

Aucun commentaire: