dimanche 25 avril 2010

வடக்கு, கிழக்கில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் காத்திருக்கும் தலையாய உடனடிப் பணி
இலங்கையின் 7 ஆவது பாராளுமன்ற அவைக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்ட பல கட்சிகளும் பல சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் நின்றிருந்தன.

முன்னைய தேர்தல்களில் மக்கள் அபிப்பிராயம், ஊகம் ஆகியவற்றிற்கமைய தேர்தல் முடிவுகள் அமைவதற்கு மாறாக தற்பொழுது நடந்து முடிந்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவு அமைந்திருப்பதை யாவரும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது ஒருபுறம் தமிழ்த் தேசியம் என்ற கொள்கைக்கும் மறுபுறம் அபிவிருத்தி என்ற கொள்கைக்கும் மக்கள் ஆணையைப் பெறும்வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளது கொள்கைகள் முன்வைக்கப்பட்ட பொழுதிலும் சில கட்சிகள் இவ்விரு கொள்கைகளுக்கும் இடைப்பட்ட நிலையிலான நெகிழும் தன்மைப் போக்குடைய கொள்கையை முன்வைத்துப் போட்டியிட்டதை யாவரும் அறிவர். கடந்த காலங்களில் வழங்கியது போல தற்பொழுது நடந்து முடிந்த தேர்தல் முடிவும் அமையாது மாறுபாடாகவே வாக்களிப்பில் பங்குகொண்ட 18% மான மக்களில் பெரும்பான்மையினரது விருப்பு வெளிவந்துள்ளமையை உணர முடிகின்றது. நாட்டை ஆளும் அரசியல் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியும் அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இவ்விரு கொள்கைக்கும் இடைப்பட்டதும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடித் தேவையாகவும் நடைமுறைச் சாத்தியமான நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையான அபிவிருத்தியும் தேசியமும் கலந்த கொள்கையை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுமாகிய பிரதான அமைப்புகள் தேர்தல் களத்தில் போட்டி போட்டிருந்தன.

எனினும், தேர்தல் முடிவானது காலத்தின் தேவைக்கேற்ப அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையும் அபிவிருத்தியும் தேவையென்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூடக் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இயற்கை , செயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழும் தமிழ்மக்கள் நிலையை சூழ்நிலையை யதார்த்த நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்மக்களது இயல்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்கி அதனை அரசு முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பை நல்கவும் தாம் சித்தமாக இருக்கும் பாணியில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையில் கருத்துகள் வெளிவந்ததையும் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் அடிக்கடி பத்திரிகை அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கை உட்பட மீள் குடியேற்றம், கடற்றொழில் வசதி போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தியில் அக்கறை எடுப்பது பற்றி வலியுறுத்தியும் வந்துள்ளதுடன், குறிப்பாக தமிழரசுக் கட்சியில் தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னணி பிரதிநிதிகளும் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குடைய கொள்கையினை வெளிப்படுத்தியும் இருந்ததை யாவரும் அறிவர்.

இந்நிலையில், பொதுத் தேர்தல் பெறுபேறு காலத்தின் தேவை, யதார்த்த நிலை என்பவற்றைக் கருத்தில் கொண்டே பொதுமக்கள் வாக்களித்துள்ளனர் என்பதைக் காட்டி நிற்கின்றது.

வாக்களிப்பில் கலந்துகொண்ட 18% மான மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மட்டும் தான் தேவையெனக் கருதியிருப்பின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு ஆசனங்களையும் தனதாக்கியிருக்க வேண்டும். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உறுப்பினர் தொகையில் கணிசமான உறுப்பாண்மையை மட்டும் அபிவிருத்தியை முதன்மைக் கொள்கையாகக் கொண்ட தென் இலங்கைக் கட்சிகள் வென்றெடுத்துள்ளனர். அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கைக் கொள்கையை வலியுறுத்தி நின்ற அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஸ்தானம் கூடக் கிடைக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களது இன்றைய உடனடித் தேவை , யதார்த்த நிலை ஆகியவற்றையும் நீண்ட கால தூர நோக்கைக் கொண்ட தேசிய கொள்கையையும் தன்னகத்தே கொண்டு களத்தில் நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான உறுப்பாண்மையை வென்றெடுத்ததன் மூலம் தமிழ் மக்களது உடனடித் தேவையான இயல்பு வாழ்க்கை உட்பட மீள்குடியேற்றம், கடற்றொழில் அடங்கலான ஏனைய அபிவிருத்திகளைப் பெற்றுத்தருவதற்கு நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆணையினை வழங்கியுள்ளதாகவே குறித்த வெற்றியை பொருள் கொள்ளவேண்டும்.

தேசியத்திற்கான கொள்கைப் போராட்டம் என்பது ஒரு தனியான நீரோட்டம். அதேபோல, தமிழர்களின் இயல்பு வாழ்க்கை. அபிவிருத்தி என்பது வேறு தனித்துவமான ஒரு நீரோட்டம். இவ்விரு நதிகளும் ஒன்றையொன்று மேவாது சமாந்தரமாக தனித்துவமாக ஓடிக்கொண்டிருப்பதே சிறந்ததாகும். எப்போதாவது ஒருநாள் இவ்விரு நதிகளும் ஒரு இடத்தில் சங்கமமாகி சமுத்திரமாக தனது தனித்துவத்தை உள்ளடக்கிய விழுமியங்களுடன் பரிணாம வளர்ச்சியடைந்த சமூகமாக உருவெடுக்கவும் கூடும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள் நன்மை கருதி காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பட கடந்த காலங்களில் தேசியத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தின் தலைவர் நெல்சன் மண்டேலாவும் எவ்வாறு அவ்வப்பொழுது மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு விட்டுக் கொடுப்புடன் கூடிய புரிந்துணர்வு நல்லிணக்கக் கொள்கைப் பிரகடனங்கள் செய்து அதன்படி செயற்பட்டார்களோ அதேவழியில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி செயற்படுவதில் தவறேதும் இருக்கமுடியாது. எனவே, அரசினால் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழருக்கும் வட, கிழக்கு மண்ணுக்கும் பாதிப்பில்லாத வகையில் அதையும் உள்வாங்கி அமையுமாயின் அதற்குப் பூரண ஆதரவை நல்குவதே காலத்தின் தேவையாகும். இதற்காகத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை இழக்காது அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களுக்கான நற்பணிகளை செய்வதன்மூலம் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மூலம் தமிழருக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதுடன் , வட, கிழக்குப் பிரதேசத்தில் தனித்துவம், தேசியம், தமிழ் மண் சிறிது சிறிதாக உட்கிடையாக பறிபோவதை சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த சிங்கள முற்போக்காளரின் புரிந்துணர்வு, நட்பு நம்பிக்கையைப் பெறவும் சந்தேகங்களைப் போக்கவும் கூடியதாக அமையும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் நேரடியாகப் பங்குகொண்டு அமைச்சர் பதவி பெற்று பல அபிவிருத்திகளை வடக்கிலும் கிழக்கிலும் ஆற்றியிருந்தனர். தேசியம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. இதனால், தனது தனித்துவம் இழக்கப்படவில்லை. அதேபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அபிவிருத்திக்காக இணைந்து அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சர் பதவியைப் பெற்று உள்ளூராட்சி அமைப்புத் தொடர்பில் பல அபிவிருத்திகளை ஆற்றியிருந்தும் தனது தனித்துவத்தை இழக்கவில்லை. பேணிப்பாதுகாத்த வண்ணம் செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தனர்.

தமிழர் தேசியத்தை இறுக்கமாக வலியுறுத்தியமையே தமிழ் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என பலராலும் பத்திரிகை மூலம் அறியவருகிறது.அக்கருத்து முழுமையாக ஏற்கக்கூடிய ஒன்றல்ல. காரணம் தனித்தேசியம் தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றது. தற்போதைய நிலையில் யதார்த்தமாகத் தமிழ்த்தேசியம் நடைபெறக்கூடிய ஒன்றல்ல எனக் கூறிவரும் ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலை கூட்டணிக் கட்சிகளுக்கே மக்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பு அமையவில்லை. இதன் மூலம் இக்கருத்து நிராகரிக்க வேண்டியதாகும். தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தோல்விக்குக் காரணங்கள் பல இருப்பினும் 18% மானவரது கருத்துப்படி தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து நின்று போட்டியிடவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது என்பதே எனது கருத்தாகும். அத்துடன்,இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமே அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒருமித்து பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் வட, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டதையும் அரசியல் முதிர்ச்சியும் மதிநுட்பமும் கொண்ட தமிழ் பேசும் மக்கள் மனதில் பதிவு செய்ததன் எதிரொலியே வரலாற்றின் திருப்புமுனையில் நிற்கும் தனித்துவ மக்கள் கூட்டத்தின் விவேகமான வாக்குப்பதிவு நிகழ்வாகும்.

ஆயினும் இலங்கை அரசியல் வரலாற்றில் 1965 ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழரசுக்கட்சி இணைந்து ஆட்சி புரிந்தும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அமுல்படுத்த முடியாது தோல்வி கண்டதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் பங்களிப்புடன் வரைந்த அரசியலமைப்பு நகல் திட்டம் பின்னர் பாராளுமன்றத்தில் கிழித்தெறியப்பட்டு புறந்தள்ளப்பட்டதும் சரித்திரம். இவ்விரு முயற்சிகளையும் முன்னெடுத்த டட்லி,சந்திரிகா ஆகியோருக்குப் பாராளுமன்ற பலமோ மக்கள் ஆதரவுப் பின் புலமோ இல்லாமையே காரணம் என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். இந்த பின்புலத்தில் இன்றைய சூழ்நிலையைப் பரிசீலிப்பது இன்றியமையாததாகும்.

இலங்கையில் ஜனாதிபதியாகவும் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய இரட்சகராக மகிந்த ராஜபக்ஷ விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. அத்துடன், தென்னிலங்கையில் பேரினவாத நச்சுக் கொள்கைகளை வலியுறுத்தி கட்சிகளை பாராளுமன்ற தேர்தலில் பூண்டோடு ஒழித்து பலம் மிக்க பாராளுமன்றத்தை தன்வசம் ஆக்கியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய பகிரங்க இரகசியமாகும். தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் யாழ்நகரில் வந்து தமிழ் மக்களைத் தான் நம்புவதாகவும் தமிழ் மக்களும் தன்னை நம்ப வேண்டுமென்றும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தெரிவு செய்து அனுப்பிய பிரதிநிதிகளுடன் பேசி உருவாகும் உணர்வுபூர்வமான அரசியலமைப்பு உறுப்புரைகளை நிறைவேற்றும் மன வைராக்கியம், துணிவு, ஆளுமை, ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்டா என்பதை ஆராயும் போது எதுவித சந்தேகமும் இன்றி கடந்த ஆண்டு எமது நாட்டில் நடந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்து எம்முன் நிழலாடுகிறது.

எனவே, இவ்வாறான அதிதீவிர துணிவும் மனவைராக்கியமும் நிறைந்துள்ள மகிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேசித் தீர்க்க முயலும் போது உருவாகும் எதிர்ப்புகளுக்கு அடிபணியாது எதிர்ப்பலைகளை துவம்சம் செய்து தீர்வை அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தி இலங்கைத் தீவில் நியாயமான அதிகாரப்பகிர்வு அனைத்து தேசிய இனங்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி மகிந்த ராஜபக்ஷ வரலாற்று நாயகனாக முடியாதா என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

ஆகவே,தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்ற மகிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கரு வளர்ச்சியடைந்து செயல்வடிவம் பெற களம் அமைக்க வேண்டியது பெரும்பான்மையாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழரசுக்கட்சியின் காலத்தால் புறம் தள்ளமுடியாத கடப்பாடாகிறது. இவ்வாறு களம் அமைக்கப்படும் பட்சத்தில் பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் சங்கமிக்கும் நிலை உருவாகும்.

எதுஎவ்வாறாயினும் தனித்துவத்தை தாரைவார்க்காது வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான மதிநுட்பத்துடன் கறைபடியாத கரமாக தமிழரசுக்கட்சி ஆளுமையும் மனவுறுதியும் மக்கள் ஆதரவும் கொண்ட “பேசித் தீர்ப்பேன்’எனக்கூறிய மகிந்த ராஜபக்ஷவின் கரத்தைப் புரிந்துணர்வுடைய நல்லிணக்கத்துடன் பற்றிப்பிடித்து அர்ப்பணிப்புடன் செயற்படின் ஆசியாவின் ஆச்சரியமான அபிவிருத்தியடைந்த நாடாக மிளிர தமிழ் மக்களும் பங்காளியானார்கள் என சரித்திரம் கூறும்.ஒரு சமயம் வெளிப்படையான புரிந்துணர்வுடன் நல்லிணக்கம் உருவாகாவிடின் தமிழ் மக்களின் உள்ளார்ந்த ஆதங்கத்தை நிஜமாக்க பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் செயற்பாடு யதார்த்தமாகும் காலம் உதயமாகும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை.

Aucun commentaire: