வடபுலத்தில் வன்முறைகள் நீடிப்பது நம்பிக்கையீனத்தையே உருவாக்கும்
"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாகியிருக்கின்றது யாழ்.குடாநாட்டு மக்களின் நிலைமை. யுத்தத்தின் சத்தம் ஓய்ந்தாலும், அதையொட்டிய அடக்கு முறைகள், கெடுபிடிகள் இன்னும் முற்றாகத் தளரவில்லை.யுத்தத்தின் பேரழிவுகளிலிருந்து போரின் பேரவலங்களிலிருந்து யாழ்.குடாநாட்டு மக்கள் உட்பட ஈழத் தமிழர் தாயகத்தின் அனைத்து மக்களும் இன்னும் மீளவில்லை. நெருக்குவாரங்கள், அழுத்தங்கள், தொந்தரவுகள் இன்னும் குறைந்துவிடவில்லை. சுருங்கச் சொல்வதானால் இயல்பு நிலைமை இன்னுமே தோற்றவில்லை.
அதற்கிடையில் "வேதாளம் மீண்டும் முருங்கை மரத் தில் ஏறிய மாதிரி' யாழ்.குடாநாட்டு மக்கள் மத்தியில் அச் சவுணர்வு மீண்டும் உச்சத்தைத் தொடும் வகையில் நிலைமை மாறிவிட்டிருக்கின்றது. ஆள்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகம், கப்பம் கோருவது, அதற்கான படுகொலைகள் என்று திடீரெனத் தலைதூக்கியிருக்கும் மோசமான கிரிமினல் சம்பவங்கள் வன்முறைகள் தங்களின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பு இல்லாத நிலையில் தாயகத்தில் தங்களுக்கு இருப்பியல் பாதுகாப்புக் கூடக் கிடையாது என்ற எண்ணவோட்டத் தையே தமிழர்கள் மத்தியில் மீளவும் ஏற்படுத்தி, உறுதிப்படுத்தி நிற்கின்றன.
ஒருபுறம் வன்முறைகள், குற்றச்செயல்கள் மோசமாக அதிகரித்துள்ளன. மறுபுறம் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கான விளைமையமாகக் குடாநாடு மாற்றப்பட்டிருக்கின்றது.
கட்டுரையாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றமை போல இதுநாள் வரை பண்பாட்டின் பெருநிலமாக நற்பழக்க வழக்கங்கள், மாண்புமிக்க மனிதநேயப் பண்பியல்புகள் போன்றவற்றின் குறியீட்டு மையமாக விளங்கிய குடாநாடு இன்று குற்றச் செயல்கள் நிறைந்த குட்டிச் சுவராகிப் போயி ருக்கின்றது. இதற்கு "ஏ 9'வீதித் திறப்போடு சகல வழிகளி லும் கிடைத்த ஒரு திறந்து விடப்பட்ட சுதந்திரத் தன் மைப் போக்கோடு யாழ்ப்பாணம் திடீரென உப்பிப் பெருத்தமையே காரணம் என்று அவர் குறிப்பிடுகின்றமையும் கவனிக்கத்தக்கது.
"யாழ்.குடாநாட்டில் உள்ள எல்லாமே மேய்ச்சலுக்காகத் திறந்துவிடப்பட்ட வெளியாக மாறியிருக்கையில் யார் வந்து என்ன செய்தாலும் பெரிதாக வெளியே தெரியப்போவதில்லை. இது, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. எனவே, தம்முடைய கைவரிசையை எல்லா இடங்களிலும் அவர்கள் காட்ட முற்படுகின்றார்கள்.' என்று கூறப்படுவதிலும் தப்பில்லை.
ஆனாலும் இன்னும் ஒரு விடயமும் இதில் கவனிக்கப்பட வேண்டும்.
குற்றச் செயல்கள் மலிந்து, அடாவடித்தனங்களும், அத்து மீறல்களும் எல்லை மீறும் ஒரு பிரதேசத்துக்கு சுற்றுலா வுக்கோ, இடங்களைப் பார்வையிடுவதற்கோ பிற இடத்துப் பயணிகள் வரமாட்டார்கள். அச்சத்தின் காரணமாகப் பின் வாங்குவார்கள்.
ஆனால் யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இவ்விட யம் தலைகீழாக நடைபெறுகிறது. ஒருபுறம் குடாநாட்டு மக்கள் வன்முறைகள், கிரிமினல் குற்றச் சம்பவங்கள், அடாவடித் தனங்கள் போன்றவற்றைக் கண்டு அச்சப்பட்டு பீதியில் உறைய, மறுபுறம் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளோ அவற்றைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் கவனத் தில் கூட எடுக்காமல் சர்வ சாதாரணமாக குடாநாட்டுக்குப் பெரும் எண்ணிக்கையில் தினசரி வந்து போகின்றார்கள். மிகப் பாதுகாப்பாக வந்து போகின்றார்கள்.
யாழ்.குடாநாட்டையும் குடாநாட்டு மக்களையும் "வேடிக்கை' பார்க்க வரும் தென் னிலங்கைப் பயணிகள் எண்ணிக்கை "படையெடுப்பு' குறை வதாகவே இல்லை.
இந்த வன்முறைகள், கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் அச்சப்படாமல் அவர்கள் தமது யாழ். "விசிட்'டை சர்வசாதாரணமாக முன்னெடுக்கின்றார் கள்.
நடக்கும் விபரீதங்கள் குறித்துப் பயம், பீதி எல்லாம் குடாநாட்டு வாசிகளுக்கே தவிர, அங்கு தினசரி பல்லாயிரக் கணக்கில் "விசிட்' செய்யும் அல்லது வியாபாரத்துக்காகப் படையெடுத்திருக்கும் தென்னிலங்கையருக்கு இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு உறுதியாக உண்டு. அதனால் இந்த விபரீதச் சம்பவங்கள் குறித்து அவர்கள் சிரத்தைப் படுவதே இல்லை.
இதற்குள் ஒரு பூதாகார விடயம் பொதிந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தங்களுக்கு எதிராக இத்தகைய வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்படமாட்டா என்ற உறுதி நிலைமை தென்னி லங்கையிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு வருகை தருவோ ருக்குத் தைரியமாக மனதில் விதைக்கப்பட்டிருக்க மறுபுறத்தில் குடாநாட்டு வாசிகளுக்கோ தமது அன்றாட இருப்பியலே சந்தேகத்துக்குரியதாகிவிட்டது, வன்முறைக் குற்றங்கள், கிரிமினல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட குழுக்களால் தங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டி ருக்கின்றன என்று அஞ்சி நடுங்கும் சூழ்நிலை வந்திருக் கின்றது.
இத்தகைய இருதுருவ நிலைப்பாட்டைப் பரிசீலனைக்கு எடுத்துக் கணிப்போரே, இப்படி யாழ். குடாநாட்டு மக்களைப் பீதிக்குள் ஆழ்த்தும் தரப்புகளின் சூத்திரதாரி யார் என்பதை இலகுவாக உத்தேசித்துக் கொள்வார்கள். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளமை போல இத்தகைய மோசமான குற்றங்களின் சூத்திரதாரிகள் தாமதிக்கப்படாமல், விரைந்து கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படவேண்டும்.
அப்போதுதான் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு இந்த ஆட் சிக் கட்டமைப்பின் மீது கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையாவது பிறக்கும். செய்வார்களா........?
Aucun commentaire:
Enregistrer un commentaire